தொழில்நுட்ப தலைநகர் டில்லி அருகேயுள்ள சேட்டிலைட் நகரான குர்கானைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது டைமர் மற்றும் கம்ப்யூட்டர் அல்காரிதம் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்களில், ஒவ்வொரு திசைக்கும் எவ்வளவு நேரம் என்பது முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும் அதன்படி பச்சை / சிவப்பு விளக்குகள் எரியும். இதன்படி, ஒரு திசையில் வாகனங்களே வராமல் இருந்தாலும், அப்பகுதிக்கான பச்சை விளக்கு, நேரம் முடியும் வரை எரியும். இதனால் நேரம் வீணாகிறது.
மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தில், கேமரா மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு வாகனங்கள் வருகிறது என்பதை கேமரா மூலம் படம் பிடித்து, சென்சார் மூலம் அப்படங்கள் உடனுக்குடன் மைக்ரோபிராசருக்கு செல்லும். அதற்கேற்றவாறு நேரமேலாண்மை தானாகவே கணக்கிடப்படுகிறது. இதனால் ஒரு திசையில் இருந்து அதிக வாகனங்கள் வந்தால், கூடுதல் நேரமும், மற்றொரு திசையில் வாகனங்கள் வருவது நின்றுவிட்டால், உடனடியாக சிவப்பு விளக்கு எரிந்து, அடுத்த திசைக்கான பச்சை விளக்கு எரிந்து விடும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் நேரம் மிச்சமாகிறது மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள டிராபிக் தொழில்நுட்பம் அமைக்க ரூ. 8 லட்சம் செலவாகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே செலவாகும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share your comments