தமிழகத்தில், ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களான, 'பிஏ4, பிஏ5' வகை வைரஸ்களால், 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.
மாதிரிகள்
சென்னை கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில் சேகரிக்கப்பட்ட 139 ஆர்.டி.பி.சி.ஆர்., மாதிரிகள், வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
புதிய வைரஸ்
அதில், எட்டு பேருக்கு, 'பிஏ5' வகையும்,4 பேருக்கு, 'பிஏ4' வகை கொரோனா வைரஸ் தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தான்.
தெலங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், ஏற்கனவே, 'பிஏ5' வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இப்போது தான், 'பிஏ5' வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 8 பேரும் குணமடைந்து விட்டனர். கொரோனா நோயாளிகள், 790 பேரில், 46 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்; 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில், ஆறு பேர் ஐ.சி.யூ.,வில் (ICU) உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கேள்விக்கு பதில்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பதில் அளித்த ராதாகிருஷ்ணன், தமிழக மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்படுகிறது. மிக மிக குறைவான விலையில் தான், மருந்து பொருட்கள் வாங்கப்படுகின்றன.
ஊட்டச்சத்துப் பெட்டகத்திற்கான டெண்டர் முடிந்ததா என்பதை உறுதி செய்த பிறகே பதில் கூற முடியும். ''குழந்தைகளுக்கான உணவையும், தாய்மார்களின் உணவையும் மாற்றி ஒப்பிடக்கூடாது,'' என்றார்.
மேலும் படிக்க...
பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!
Share your comments