உலக மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக 'கொரோனா' (Corona) உடன் 'இன்புளுயன்சா' வைரசும் சேர்ந்து, 'புளோரோனா' என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், 'டெல்டா, காமா, ஒமைக்ரான்' என பல வடிவங்களில் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரசுடன், 'இன்புளுயன்சா' எனப்படும் குளிர் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசும் இணைந்து, 'புளோரோனா' என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புளோரோனா வைரஸ் (Florona Virus)
மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில் கர்ப்பிணி ஒருவருக்கு முதன் முதலாக புளோரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் இன்புளுயன்சா ஆகிய இரண்டுக்கும் இருமல், ஜலதோஷம், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வறட்சி, தலைவலி, சோர்வு போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனினும் நோய் பாதிப்பு அறிகுறி தோன்றும் காலத்தில் வித்தியாசம் காணப்படுகிறது. உடலில் வைரஸ் நுழைந்த உடன் 3 - 4 நாட்களில் 'புளூ' (Flu) பாதிப்பு அறிகுறிகள் தோன்றுகின்றன. 2 - 14 நாட்களில் கொரோனா பாதிப்பு தெரியத் துவங்குவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இரு வைரஸ்களும் காற்று வாயிலாகவே மூச்சுக் குழல், நாசி, நுரையீரல் செல்களை தாக்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எனினும் இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. சிலருக்கு அறிகுறியின்றி பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சிலருக்கு மிதமானது முதல் தீவிர பாதிப்பு உண்டாவது தெரிய வந்துள்ளது. இரண்டு வைரஸ்களின் மரபணுக்களும் வெவ்வேறு என்பதால் அவற்றின் பாதிப்பை கண்டுபிடிக்க தனித் தனி சோதனை அவசியம்.
புளோரோனா பாதிப்பு தீவிரமடைந்தால் நுரையீரல் அழற்சி நோய்க்கு வித்திடும். அத்துடன், ஒரு சிலருக்கு இதய பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும் என, விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூஸ்டர் டோஸ் (Booster Dose)
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு, நாட்டு மக்களுக்கு நான்காவது 'பூஸ்டர் டோஸ்' போடும் திட்டத்தை துவக்கி உள்ளது. இந்தியாவில் தற்போது தான் கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் புளோரோனா பாதிப்பை தவிர்க்க முக கவசம் அணிவது, அடிக்கடி கை, கால்களை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments