1. செய்திகள்

அதிக மகசூல் தரும் 14 புதிய பயிர் ரகங்கள்

KJ Staff
KJ Staff

வ்வொரு வருடமும் விவசாயிகளின் நலன் கருதி வேளாண் பல்கலைக்கழகங்கள் புதிய பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவது உண்டு. இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் இரண்டும் இணைந்து அதிக மகசூல் தரும் 14 புதிய பயிர் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதில் நெற்பயிரில் ஏடிடீ 53, நெற்பயிரில் விஜிடி 1, சாமை ஏடிஎல் 1, பாசிப் பயறு விபிஎன் 4, நிலக்கடலை பிஎஸ்ஆர்-2, ஆமணக்கு ஒய்.டி.பி.1, மரப் பயிரில் கடம்பு எம்டிபி 1, சுரைக்காய் பிஎல்ஆர் 2, பூண்டு உதகை - 2, நட்சத்திர மல்லிகை கோ 1, உருளைக் கிழங்கு குப்ரி சஹ்யாத்ரி, வாழையில் காவிரி கல்கி, காவிரி சபா, காவிரி சுகந்தம் என மொத்தம் 14 பயிர்கள் இடம்பெற்றுள்ளன. 

யிர் ரகங்களின் விவரங்கள்

நெல்- ஏடிடீ-53: இது குறுவை, நவரை, கோடைப் பருவங்களில் 105 நாட்களில் வளரக்கூடியது. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 6,340 கிலோ மகசூல் தரக்கூடியது. நடுத்தர சன்ன அரிசி, அதிக அரவைத் திறன் கொண்டது. குலைநோய், இலை உறை அழுகல், தண்டு துளைப்பான், இலை மடக்குப் புழுவுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.

நெல்- விஜிடி-1: சம்பா பருவத்தில் 130 நாட்களில் வளரக் கூடிய ரகம். இது சீரக சம்பா அரிசி போன்ற சுவையைத் தரும். ஒரு ஹெக்டேருக்கு 5,850 கிலோ விளைச்சல் தரும்.

சாமை-  ஏடிஎல் -1: அடர்த்தியான கதிர்களைக் கொண்ட இந்த ரகம் அதிக சத்துகளும் உடையது. வடக்கு தமிழகமான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் பயிர் செய்ய ஏற்றது. மானாவாரியில் ஒரு ஹெக்டேருக்கு 1,590 கிலோ விளைச்சல் தரும்.

பாசிப் பயறு- விபிஎன்-4:  65 முதல் 75 நாள்களில் ஹெக்டேருக்கு 1,025 கிலோ விளைச்சல் தரக் கூடியது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மஞ்சள் தேமல் மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது இந்த ரகம்.

நிலக்கடலை- பிஎஸ்ஆர்-2: 110 நாள்களில் வளரக்கூடிய இந்த ரகம் மானாவாரியில் ஒரு ஹெக்டேருக்கு 2,220 கிலோ விளைச்சலும், இறவையில் ஒரு ஹெக்டேருக்கு 2,360 கிலோ விளைச்சலும் தரக்கூடியது. சுமார் 70.2 சதவீதம் பருப்பு உடைப்புத் திறன், 46.51 விழுக்காடு எண்ணெய்ச் சத்து கொண்டது. 

சுரைக்காய்- பி. எல். ஆர்-2: நமது பாரம்பர்ய குண்டு சுரை போன்ற இது ஹெக்டேருக்கு 42 டன் மகசூல் தரக்கூடியது. பந்தல் அமைப்பு இந்த ரகத்திற்கு தேவைப்படாது. காய்கள் இளம்பச்சை நிறத்தில் 50 முதல் 55 நாள்களில் அறுவடைக்குத் தயாராகும்.

பூண்டு-  உதகை-2: மலை பூண்டு ரகமான இது 123 நாட்களில் 17 டன் மகசூல் தரும். குமிழ்கள் மிதமான முட்டை வடிவில் பளபளப்பு இளஞ்சிவப்பு நிறத்துடன் இருக்கும். அதிக அளவு அல்லிசின் (கிராம் ஒன்றுக்கு 3.87 மைக்ரோகிராம்) கொண்டது. 

நட்சத்திர மல்லிகை- கோ-1: ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது இவை. மற்ற மல்லிகை வகைகள் சந்தையில் கிடைக்காத பருவங்களில் (நவம்பர் - பிப்ரவரி) கிடைக்கப்பெறும். அழகிய பெரிய மொட்டுகள், மிதமான நறுமணம் கொண்டது. மலர் மொட்டுகள் அதிக நேரம் விரியாமல் இருக்கும் தன்மை உடையவை. நீண்ட மலர் காம்புள்ள இது, பறிப்பதற்கும் மாலை கட்டுவதற்கும் தொடுப்பதற்கும் ஏற்புடையதாக இருக்கும்.

கடம்பு - எம்.டி. பி-1: குறுகிய கால மரப்பயிரான இதிலிருந்து மரக்கூழ், ஒட்டுப் பலகை மற்றும் தீக்குச்சி பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். ஹெக்டேருக்கு 135 முதல் 175 டன்கள் விளைச்சல் தரும்.

உருளைக்கிழங்கு - குப்ரி சஹ்யாத்ரி: வசந்தகாலம் மற்றும் கார்க்காலங்களில் பயிரிடக்கூடிய இந்த ரகம் இலைக்கருகல் மற்றும் முட்டைக் கூட்டு நூற்புழுவிற்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கொண்டது. ஹெக்டேருக்கு 28-35 டன் மகசூல் தரும்.

வாழை- காவிரி கல்கி: குட்டையான இந்த ரகம் குறுகிய காலப் பயிராகும். கற்பூரவல்லி ரகத்தைப் போன்றே அதிக அளவு இனிப்புத் தன்மை கொண்டது. மரத்தின் உயரம் குறைவாக இருப்பதால், குலை தள்ளும் பருவத்தில் முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அடர் நடவு செய்யை ஏற்ற ரகம். ஹெக்டேருக்கு 50-60 டன் விளைச்சல் தரும்.

வாழை- காவிரி சபா: இந்த ரகம் காயாகவும், கனியாகவும் சமையலுக்கு பயன்படுத்தலாம். வாடல் நோயைத் தாங்கி வளரக் கூடிய இது களர் மற்றும் உவர் நிலத்திலும் வளரக் கூடியது. ஹெக்டேருக்கு 58 முதல் 60 டன் விளைச்சல் தரக்கூடியது.

வாழை-  காவிரி சுகந்தம்: நாமக்கல் மாவட்டம், கொல்லி மலைப் பகுதியில் பயிரிட ஏற்றது. காய்கள் அடர் பச்சை நிறத்துடனும், கனிகள் பச்சை கலந்த மஞ்சள் நிறத்துடனும் இருக்கும். கனிகள் இனிப்பு சுவையுடையது.வாடல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது. சராசரியாக ஹெக்டேருக்கு 50 டன் மகசூல் தரும். 

ஆமணக்கு- ஒய்.டி. பி-1: பருத்த விதைகளைக் கொண்ட இந்த ரகம், ஆண்டுக்கு ஒரு செடியில் இருந்து 3 கிலோ விதை கிடைக்கும். வாடல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. ஹெக்டேருக்கு 1,460 கிலோ விளைச்சல் தரும்.

English Summary: Newly Released High Yielding Varieties Published on: 21 January 2019, 01:57 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.