தேனி கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் விவசாயிகள் என பலரும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களும் கலந்து கொண்டு பேசினார்.
அமைச்சர் பேசியதாவது:
இந்தியாவிலேயே சிறப்பாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள தேனி மாவட்டத்தில் முதல் முறையாக ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வந்த மருந்தகங்கள் முந்தைய அதிமுக அரசால் கண்டுகொள்ள வில்லை. இதனால் பல மருந்தகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு புதிய மருந்தகங்கள் திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலே தேனி மாவட்டத்தில் முதன்முறையாக 10 கூட்டுறவு சங்கங்களின் மூலம் 6,898 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தேனி மாவட்டத்தில் சிறப்பாக தொடர்ந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் செயல்படவுள்ளது.
மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூபாய் 11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குக்கு மேலும் விவசாயிகளுக்கு கடன் தேவைப்பட்டால் அதையும் வழங்க இந்த அரசு தயாராக இருக்கிறது.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் பழுப்பு நிற அரிசி வினியோகம் செய்யப்படாமலிருக்க அந்தந்த மாவட்ட தலைவர்கள் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது, அதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் ஐ பெரியசாமி பேசினார்.
மேலும் படிக்க:
100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் விரைவில் உயர்த்தப்படும்- தமிழக அரசு அறிவிப்பு!
அரசு திட்டம்: அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58!
Share your comments