1. செய்திகள்

வலிப்பு நோயினை எச்சரிக்கும் கருவி

KJ Staff
KJ Staff

மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்.

எது வலிப்பு? எது வலிப்பு நோய்?

‘வலிப்பு’ என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits/Seizures/Convulsions). ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.

எப்படி ஏற்படுகிறது?

மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்தச் செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம்.

வலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி

வலிப்பு நோயால் மரணமடைபவர்களில், 17 சதவீதம் பேர் வரை, எதிர்பாராமல் திடீரென மரணமடைவதாக மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர். இத்தகைய மரணங்களில் கணிசமானவை, வலிப்பு நோய் உள்ளவர்கள் துாங்கிக் கொண்டிருக்கும் போது நிகழ்கின்றன.
வலிப்பு நோய் உள்ளவரின் படுக்கையில், சில உணரிகளை பொருத்தி, திடீர் உடல் வலிப்புகளை கண்காணித்து எச்சரிக்கும் கருவிகள், தற்போது வந்துள்ளன. என்றாலும், அதைவிட மிக துல்லியமாக, துாக்கத்தில் வரும் வலிப்பை கண்டறிய, நெதர்லாந்தின் எய்ண்ட்ஹோவென் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதிய கருவியை உருவாக்கி உள்ளனர்.

'நைட் வாட்ச்' என்ற கையில் அணியும் கருவியான இது, வலிப்பு நோயாளியின் இதயத்துடிப்பு, அவரது கைகள் வலிப்பால் அசையும் வேகம் போன்றவற்றை, துல்லியமாக அளக்கிறது. 
இதனால் வலிப்பு வந்தவுடன், வீட்டிலிருப்பவர்களுக்கு தெரிவிக்க, எச்சரிக்கை மணியை ஒலிக்கும். மேலும், வேண்டியவர்களின் மொபைலுக்கும் தகவல்களை அனுப்பும்.

சோதனைகளின் போது, வலிப்பு வந்திருப்பதை, 85 முதல் 96 சதவீதம் வரை, துல்லியமாக கணித்து, எச்சரிக்கை விடுத்தது, நைட்வாட்ச் கருவி.
எய்ண்ட்ஹோவன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத்தை லிவ்அஷ்யூர்டு (LivAssured) என்ற அமைப்பு, நைட்வாட்ச் கருவியை மேலும் சோதித்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

English Summary: Night watch to identify fits Published on: 17 November 2018, 03:45 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub