புதிய வகை கொரோனா தமிழகத்தில் இல்லை என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். உலக பக்கவாத தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைச்சர் சுப்பிரமணியன், பக்க வாத விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது: உலகளவில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பக்கவாத நோயால் பாதிப்படைகின்றனர். இதனால், 1.5 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இந்திய அளவில் ஆண்டுக்கு 6 லட்சம் பேருக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டு, 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.
ரத்த நாள அடைப்பு மற்றும் உடைப்பால் பக்க வாதம் ஏற்படுகிறது. பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை, 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தால், முழுதும் குணப்படுத்தலாம்.பக்கவாத நோய்க்கான அறிகுறிகளான தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், மறந்து போதல், கை, கால்கள் தளர்ச்சி, வாய் குளறுதல், உணர்ச்சி குறைவு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
அல்டிநோஸ்
பக்கவாத நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 'அல்டிநோஸ்' எனும் மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. ஒருவருக்கு ஒரு முறை மருந்து செலுத்த 35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அனைத்து மாவட்ட, வட்டார தலைமை மருத்துவமனைகளில், இந்த மருந்து தயார் நிலையில் உள்ளது.
ஏ ஒய் 4
'ஏ ஒய் 4' வகை கொரோனா, கர்நாடகாவின் மொத்த பாதிப்பில், 1 சதவீதம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் 90 சதவீதம் டெல்டா வைரஸ் பாதிப்பு தான் உள்ளது. நேற்று எடுக்கப்பட்ட மாதிரிகளில் 65 சதவீதம், டெல்டா வைரஸ் பாதிப்பும், 35 சதவீதம் கொரோனா பாதிப்பும் உள்ளது. புதிய வகை கொரோனா தமிழகத்தில் இல்லை. தீபாவளியை முன்னிட்டு, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தீ விபத்து சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி., கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி முதல்வர் பாலாஜி, நிலைய மருத்துவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
முடிவுக்கு வராத கொரோனா 2வது அலை: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
கர்நாடகாவில் ஏஒய். 4.2 உருமாறிய கொரோனா: 2 பேருக்கு பாதிப்பு!
Share your comments