விவசாயிகள் எதிர்ப்பார்த்திருந்த தருணம் தற்போது கனிந்துள்ளது. தென்மேற்குப் பருவமழைக்குப் (Southwest monsoon) பிறகு, தமிழகத்திற்கு மழைப்பொழிவைத் தரும், வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) தொடங்கவுள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் (Chennai Meteorological Center) தெரிவித்துள்ளது. இச்செய்தியை கேட்டறிந்த விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விட்டு விட்டு மழை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் (Bay of Bengal) காற்றழுத்த தாழ்வு நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தான் இது என்று வானிலை ஆய்வாளர்கள் (Meteorologists) கூறியுள்ளனர். தமிழகத்திற்கு பலனளிக்கக் கூடிய இந்த மழை, எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தின் விவசாய தேவையையும், தண்ணீர் தேவையையும் கோடை காலத்தில் (Summer) சமாளிக்க இந்த மழை தான் பேருதவியாக உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழ்நிலை:
வடகிழக்கு பருவமழையை நம்பி, தற்போது விவசாயிகள் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதிக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருப்பது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், வரும் 25-ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்று தெரிந்துள்ளது. இதனால், விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரும், குடிநீர்த் தேவையும் பூர்த்தியடையும்.
தாமதமான பருவமழை:
தென்னிந்தியப் பகுதிகளில் அக்டோபர் 22 ஆம் தேதி வரை மேற்கு திசை காற்று (West wind) வீசக் கூடிய சூழல் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 16 இல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, தற்போது தாமதமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்த்த மழை:
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனது. இந்த ஆண்டாவது பருவமழை கைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது ஏரிகளில் நீர் மட்டம் அதிகமாக இருப்பதாக பொதுப் பணித் துறை கூறுகிறது. புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் அனுப்பும் ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் இன்னும் 4 மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் (Water famine) இருக்காது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை பெய்தால் மட்டுமே கோடையில் நமக்கு வசந்தகாலமாக (spring) இருக்கும் என்பதே நிதர்சனம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விடைபெறத் துவங்கியது தென்மேற்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
கோவில்பட்டியில் மழை இல்லாததால் கருகும் பயிர்கள்! பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றிவரும் விவசாயிகள்!
கைகொடுக்குமா அரசு!
Share your comments