கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு 'கோவாக்சின்' (Covaxin) தடுப்பூசி ஒரு 'டோஸ்' செலுத்தினாலே தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
சென்னையில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
சீரம் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் நம் நாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஆராய்ச்சி இதழ்
இந்திய தடுப்பூசிகள் தவிர்த்து ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' அமெரிக்காவின் மாடர்னா மற்றும் ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிக்கும் தடுப்பூசிகளை பயன்படுத்தவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தலா இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் உட்பட முன்கள பணி யாளர்களிடம் சென்னையில் மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 114 பேர் பங்கேற்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு, கொரோனாவால் பாதிக்கப்படாமல் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டோருக்கு கிடைக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த முதற்கட்டப் பரிசோதனைகளை அதிகமானோருக்கு செய்ய வேண்டும். அதில் இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு உறுதி செய்யப்பட்டால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினாலே போதுமானது. அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) கிடைக்கும்.
நாடு முழுதும் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில், ஒரு கோடி 'டோஸ்' தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
மேலும் படிக்க
தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படுமா? இல்லையா?ஆய்வில் தகவல்!
ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை
Share your comments