வரத்து குறைவால் இன்னும் மூன்று மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறியுள்ளனர்.
வரத்து குறைவு
வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் காய்கறிகளின் விளைச்சல் பாதித்து, வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் காய்கறிகளில் முக்கியமாக வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பெரிய வெங்காயம் அதிக விலையில் கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த சூழலை தமிழக அரசு விரைவில் சரி செய்யும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை என்று காய்கறி வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் லாரிகள் மூலம் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த 25 ஆனது 15 ஆக குறைந்துள்ளது மற்றும் இதன் காரணமாகவே பெரிய வெங்காயத்தின் விளையும் உயர்ந்துள்ளது.
விலை குறைய வாய்ப்பில்லை
பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.60 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து திண்டுக்கல் வெங்காய ஏற்றுமதியாளர்கள் கமிஷன் மண்டி வர்த்தகர் சங்கம் பொருளாளர் எம்.வி. மாரிமுத்து கூறியதாவது: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது மற்றும் நடப்பட்ட வெங்காயமும் சேதமடைந்துள்ள நிலையில் திண்டுக்கல்லிற்கு பெரிய வெங்காயம் கொண்டு வரும் லாரிகளின் எண்ணிகை 25 இல் இருந்து 15 ஆக குறைந்துள்ளது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்த்தப்பட்டது.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 க்கு விற்கப்படும் நிலையில் பெரிய வெங்காயம் ரூ.60 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் வெங்காயத்தை நடவு செய்து அறுவடை செய்ய மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் தற்போதுள்ள பெரிய வெங்காயத்தின் இருப்பு படிப்படியாக தீரும் நிலையில் விளையும் உயர்த்தப்படும் என்றும் இன்னும் மூன்று மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments