![Palmyra sale - Action order for ration shops!](https://kjtamil.b-cdn.net/media/15328/ks.jpg?format=webp)
இனி, ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் (Budget)
நடந்து முடிந்த சட்டப்பேரவையில் முதன் முறையாக வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பனை மரம் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மானிய விலையில் பனங்கன்றுகள் (Subsidies prices)
பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
பனை வெல்லம் விற்பனை
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
-
பொது விநியோக துறையின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விநியோகம் நடைமுறைக்கு வருகிறது.
-
அதன்படி கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர், பனை வெல்லத்தின் பேக்கிங், எம்ஆர்பி விலை அச்சிடுதல், பேக்கிங் தேதி, காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் எண் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
கட்டாயப்படுத்தக் கூடாது (Should not be forced)
ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பனை வெல்லத்தை விருப்பப்பட்ட பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம். அதேநேரத்தில் கட்டாயம் வாங்கிக் கொள்ளுமாறு, வாடிக்கையாளர்களைக் கடைக்காரர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.
நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உதவியுடன் மாவட்ட மற்றும் தாலுகா மற்றும் கிராமங்களில் விளம்பர பிரச்சாரம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல வாய்ப்பு (Good chance)
கலப்படம் இல்லாத சுத்தமான தரமான பனை வெல்லம் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே உடல் நலனுக்காகப் பனை வெல்லத்தைப் பயன்படுத்த விரும்புவோர் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க...
மானிய விலையில் நெல் விதைகள் - பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments