ஆண்டுதோறும் ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் ''புனித வெள்ளி'' ஆக அனுசரிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் நாள் முழுவதும் நோன்பையும் தவத்தையும் புனித வெள்ளியன்று கடைப்பிடிப்பார்கள். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
புனித வெள்ளி வரலாறு
முப்பது வெள்ளிக் காசுகளுக்காக ஏசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. ஏசு கிறிஸ்துவைக் கைது செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் யூதாஸ் நேராகச் சென்றார். ஏசு கிறிஸ்துவைப் பற்றிய தகவல் வீரர்களுக்கு தெரிவிக்க யூதாஸ் 30 வெள்ளி நாணயங்களை வாங்கிக் கொண்டு காட்டிக்கொடுக்க ஜெருசலேம் காவலர்களால் ஏசு கைது செய்யப்பட்டார். முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமக்க வைத்து கல்வாரி மலைக்கு அழைத்து சென்றனர் காவலர்கள். கல்வாரி மலையில் உள்ள குன்றின் மேல் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று நம்பப்படுகிறது.
புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
இந்த புனித வெள்ளி நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. இதில், கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
புனித வெள்ளி வழிபாடு முறை
இன்று முழுவதும் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி தவம் இருப்பர். இரவுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வருகிறது. பின் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை தொடங்குகிறது.
ஈஸ்டர் பெருநாள்
ஏசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்றாவது நாள் அவர் உயிர்த்தெழுந்து மக்களுக்கு பல அற்புதங்களை புரிந்ததாக நம்பப்படுகிறது. அந்த நாளைத்தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடுகின்றனர். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share your comments