திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாரத்திற்கு உட்பட்ட நகராட்சி கடை வீதி நடுநிலைப்பள்ளியில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஸ்வாதி, சுவேதா, தருணிகா, வைஷ்ணவி, வானதி, வந்தனா, வர்ஷினி, விதுபாலா, பாத்திமா ஆகியோர் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
உலக தண்ணீர் தினம் மார்ச் மாதம் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் 'அமைதிக்கான நீர்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு பேரணி:
அதனடிப்படையில், ”தண்ணீர் என்பது பயன்படுத்தப்படுவதற்கும், போட்டியிடுவதற்குமான ஒரு வளம் மட்டுமல்ல - அது மனித உரிமை, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீர் உள்ளடங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் அனைவரும் தண்ணீரைச் சுற்றி ஒன்றுபட்டு, அமைதிக்காக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும், மேலும் நீரினை அடிப்படையாக கொண்டு நிலையான மற்றும் வளமான நாட்களுக்கு அடித்தளத்தை அமைக்க வேண்டும்” என்று தோட்டக்கலைப் பிரிவு மாணவிகளும் மற்றும் பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது, பழனி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலக்குமாரின் வழிகாட்டுதலின்படி, தோட்டக்கலை உதவி அலுவலர் கெளசல்யா மற்றும் பொறுப்பு தலைமையாசிரியர் கோகிலா வாணி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கருப்பொருளை மையமாக கொண்டு பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெண் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு:
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாரத்திற்கு உட்பட்ட வே.பா.புதூர் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் திலகவதி தலைமையில் மகளிர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஸ்வாதி, சுவேதா தருணிகா, வைஷ்ணவி, வானதி, வந்தனா, வர்ஷினி, விதுபாலா, பாத்திமா ஆகியோர் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு, மற்றும் பெண் விவசாயிகளுக்கான முக்கிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
மகிலா கிசான் சக்திகரன் பரியோஜனா (MKSP):
MKSP என்பது தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-NRLM (DAY-NRLM) இன் துணை அங்கமாகும், இது விவசாயத்தில் பெண்களின் தற்போதைய நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் முயல்கிறது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தில் (MIDH) காளான் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது.
காளான் ஆலையின் விலை அதிகபட்சம் 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த செலவில் 50%, அதாவது ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது எனவும் மாணவிகள் பெண் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
Read more:
Share your comments