இனி 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த "பிரதம மந்திரி கிஸான் மாந்தன் யோஜனா" என்ற விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறலாம்.
"பிரதம மந்திரி கிஸான் மாந்தன் யோஜனா" என்ற விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் வேளாண் கூட்டுறவுத் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கு வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள், அவர்களது 60 வயது பூர்த்தியாகும் போது இந்த ஓய்வூதியம் பெரும் வகையில் வழிவகை செய்யப்படும். இதில் விவசாயிகள் செலுத்தும் காப்புறுதி தவனத் தொகைக்கு இணையாக, தனது பங்குத் தொகையை மத்திய அரசு செலுத்தும்.
18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் அனைவரும் தங்களது வயதிற்கேற்ப காப்புறுதி தொகையை செலுத்தி வர வேண்டும். இதில் ரூ 50 இல் இருந்து ரூ 200 வரை செலுத்த வேண்டும். எப்போது விவசாயிகள் 60 வயது பூர்த்தி அடைகிறார்களோ அப்பொழுது ரூ 3000 ஓய்வூதியம் பெற முடியும். இந்தத் தொகையை ப்ரீமியமாக மாதந்தோறும், காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என்ற முறையில் செலுத்தலாம். இத்தொகையை தங்களது வங்கிக் கணக்கு மூலமாகவும் அல்லது பிரதம மந்திரியின் கிஸான் சம்மன் நிதி திட்டத்தில் இணைந்திருப்பின் மூலமாகவும் தொகையை செலுத்தலாம்.
இத்திட்டத்தில் இணைய ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் தங்களுடைய பெயர், ஆதார் எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு, கணவர் அல்லது மனைவியின் பெயர், வாரிசுகள் பெயர்கள், ப்ரீமியம் செலுத்தும் பருவம் ஆகிய அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும், பின்னர் அதற்கான ரசீது வழங்கப்படும் மற்றும் ஓய்வூதிய கணக்கு எண்ணுடன் கூடிய அடையாள அட்டையும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் இத்திட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கான பதில்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இத்திட்டத்தில் தொடர விருப்பம் இல்லாத விவசாயிகள் தாங்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகள் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கு மாதம் ரூ 1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று "பிரதம மந்திரி கிஸான் மாந்தன் யோஜனா" என்ற விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் எவ்வாறு பயன் பெறுவது மற்றும் அதற்கான விதிமுறைகள் என்ன என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வயது மற்றும் தொகை
வேளாண்மை துறையினர் இது தொடர்பாக கூறும்போது: 18 வயது பூர்த்தி ஆனவர்கள் ரூ 55, 19 வயதினர் ரூ 58, 20 வயதினர் ரூ 61, 21 வயதினர் ரூ 64, 22 வயதினர் ரூ 68, 23 வயதினர் ரூ 72, 24 வயதினர் ரூ 76, 25 வயதினர் ரூ 80, 26 வயதினர் ரூ 84, 27 வயதினர் ரூ 88, 28 வயதினர் ரூ 95, 29 வயதினர் ரூ 100, 30 வயதினர் ரூ 105, 31 வயதினர் ரூ 110, 32 வயதினர் ரூ 120, 33 வயதினர் ரூ 130, 34 வயதினர் ரூ 140, 35 வயதினர் ரூ 150, 36 வயதினர் ரூ 160, 37 வயதினர் ரூ 170, 38 வயதினர் ரூ 180, 30 வயதினர் ரூ 190, 40 வயதினர் ரூ 200 என்ற வீதத்தில் திட்டத்தில் இணைந்துள்ள விவாசிகள் தங்களது வயதிற்கேற்ப ப்ரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments