சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் முதல்முறையாக இயந்திரம் மூலம் நெல் நடவு (Paddy Planting) பணிகளை துவக்கிய விவசாயிகள், கடனுதவியாக இயந்திரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் நடவு பணி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் மற்றும் முதலைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில பகுதியில் திருமங்கலம் கால்வாய் பாசனத்திலும், சில பகுதிகளில் கன்மாய் மற்றும் கிணற்றுப் பாசனம் மூலமும் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும் நடவு பணிக்கு ஆள் பற்றாக்குறையால் பல்வேறு கிராமங்களில் உரிய நேரத்தில் நடவு பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இயந்திரம் மூலம் நடவு
மதுரை மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நடவு பணிகள் பல பகுதிகளில் நடந்தாலும், விக்கிரமங்கலம் பகுதியில் இதுவரை ஆட்கள் மூலமே நடவு பணி நடந்து வந்தது. முதல்முறையாக விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கல்புளிச்சான் பட்டியில் பால்பாண்டி எனும் விவசாயி தனது தோட்டத்தில் பவர் டில்லர் (Power Tiller) வடிவிலான இயந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டார். இதுகுறித்து பால்பாண்டி கூறுகையில் ‘வழக்கமான நெல் நடவுக்கு நாற்றங்கால் முதல் நடவு பணிகள் வரை ஒரு ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் அளவில் செலவாகும். இயந்திர நடவுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாயில் முடிந்து விடுகிறது. பணத்தை விட நெல் நடவிற்கு ஆள் கிடைப்பதே அரிதாகிவிட்டது.
கோரிக்கை
நாகரீக உலகில் பலர் இலகுவான பணிகளுக்கு செல்வதால், விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறையாகி விட்டது. மண்ணோடு மனிதன் இணைந்து செய்த விவசாயம் தற்போது இயந்திரம் மூலம் நடக்கிறது. தற்போதைய ஆள் பற்றாக்குறையாலும், குறைவான நேரத்தில் பணிகள் முடிவதாலும் நானும் இயந்திர நடவுக்கு மாறி விட்டேன். இதற்குரிய நடவு இயந்திரங்கள் எங்கள் பகுதியில் யாரிடமும் இல்லாததால், வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைத்து வாடகைக்கு (Rent) நடுகிறோம். எனவே தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் இதே இயந்திரத்தை இப்பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையிலும், வங்கி கடனுதவியிலும் வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
மேலும் படிக்க
6 மாதத்திற்கு தொடர் லாபம் பெற மணத்தக்காளிக்கீரை
வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!
Share your comments