போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஎன்ஏ சேதம் ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையானது, உலகளாவிய மக்கள் தொகையில் 92% மக்கள், காற்றின் தர நிலைகள் உலக சுகாதார அமைப்பின் வரம்புகளைவிட அதிகமான இடங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, வெளிப்புற காற்று மாசுபாடு குறிப்பாக போக்குவரத்து தொடர்பான மாசுபாடு உலகெங்கிலும் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்த காற்று மாசுபாடு உடல்நலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
போக்குவரத்து தொடர்பான காற்று மாசுபாட்டின் அதிக அளவு வெளிப்பாடு என்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டெலோமிரே (telomere) குறைப்பு என்ற குறிப்பிட்ட வகை டி. என். ஏவை சேதம் ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் மருத்துவம் எச்சரிக்கிறது.
அமெரிக்காவில், இரண்டாவது மாசுபட்ட நகரமான காலிஃபோர்னியாவின் ஃபிரஸ்னோ பகுதியில் உள்ள இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்தனர். அந்த ஆய்வில் காற்று மாசுபாட்டின் அதிக அளவு வெளிப்பாடு உள்ளதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டெலோமிரே குறைவு ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தும். மேலும் டி. என்.ஏ. மட்டுமல்லாமல் கொழுப்புக்கள், புரதங்கள் ஆகியவற்றில் சேதத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள காற்று மாசுபாடு பகுதியில் உள்ள வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமுள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
Share your comments