2022ம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " கடந்தாண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு தான் நீட் முதுகலைத் தேர்வு நடைபெற்றது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட வேண்டிய முதுகலை கலந்தாய்வு, மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஜனவரி மாதம் தான் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் 30ம் தேதி சிறப்பு கலந்தாய்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு கலந்தாய்வை மேலும் தாமதப்படுத்தியது.
அகில இந்திய மற்றும் மாநில அளவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகும், காலியிடங்களை நிரப்புவதற்காக விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் நீட் முதுகளைத் தேர்வு மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தற்போது வரை முடியுவில்லை. இன்னும், பல மாநிலங்கள் தங்களுக்கான கலைந்தாய்வை முடிக்க வில்லை.
எனவே, 2021 மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவடைதற்கும், 2022 நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கும் இடையே மிகவும் குறுகிய காலமே உள்ளது. நீட் போன்ற ஒரு சவால் பொருந்திய தேர்வை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும்.
மேலும், கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா அலை காரணமாக, தொலை மருத்துவ சேவை மற்றும் லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 2022 நீட் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கொரோனா சிகிச்சை பணி கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா சிகிச்சை பணி காரணமாக இறுதி ஆண்டுத் தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தாண்டு நீட் முதுகலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சில மாத காலம் கழித்தே தேர்வு நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, முதுநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக வெளியான அறிவிக்கை போலியானது என மத்திய அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இதுபோன்ற எந்த அறிவிக்கையையும் வெளியிடப்படவில்லை என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க
வேகமாகப் பரவும் தக்காளி காய்ச்சல், 80 குழந்தைகளுக்கு பாதிப்பு
Share your comments