வரும் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பயிர் இழப்பை தவிர்க்க விவசாயிகள் தங்கள் வேளாண் பயிர்களை உடனே காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பயிர் காப்பீடு மிகவும் அவசியம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் தங்கள் பயிர்களின் மகசூலை இயற்கை பேரிடர்களில் இருந்து காக்க பயிர் காப்பீடு செய்வது மிகமிக அவசியமாகும். தற்போது, வேளாண்மை பயிர்களான சம்பா நெற்பயிர், சிறுதானிய பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, சிவப்பு மிளகாய், கேரட், கத்தரி, வெண்டை, தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் முட்டைகோஸ் பயிர்களுக்கான பயிர் காப்பீடு நடைபெற்று வருகிறது.
3 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு
வரும் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வர்த்தக வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட இருக்கும் நிதி இழப்பீடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பயிர் காப்பீடு - மாவட்ட வாரியக கடைசி தேதி
ஈரோடு, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, திருப்பூர், தருமபுரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சம்பா நெல் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கான இறுதி நாள் வரும் நவம்பர் 30ஆம் தேதி ஆகும்.
மேலும் தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பா நெல் காப்பீடு செய்ய வரும் டிசம்பர் 15ஆம் தேதி இறுதி நாள் ஆகும்.
பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்
-
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
-
அடங்கல்/ சிட்டா
-
வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல்
-
ஆதார் அட்டை நகல்
இவ்வாறு தனது அறிக்கையில் முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க..
PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?
தமிழக அரசின் "உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்" - சிறப்பு அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
Share your comments