வேளாண்துறையில் மேற்கொள்ளப்பட்ட 3 சட்டத் திருத்த மசோதாக்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் விவசாயிகளை பாதிக்கும் எனக் கூறி எதிர் கட்சியினர் மற்றும் பல்வேறு விவசாய அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருள்கள் மீதான சட்டத் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு மசோதா உள்ளிட்டவைகளுக்கு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. வேளாண்துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் இந்த மசோதாக்கள் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. மசோதாக்களுக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் கடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.
தமிழகத்தில் போராட்டம்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்ந்த விவசாய சங்கத்தினர் வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சாலைமறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மற்ற அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டத்தின் போது சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 560 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
கர்நாடகத்தில் போராட்டம்
மேலும், கன்னட செலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், கன்னட கூட்டமைப்பினர், 300க்கும் மேற்பட்டோர், கர்நாடகா எல்லையில் உள்ள அத்திப்பள்ளி ஆர்ச் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாட்டாள் நாகராஜ் உட்பட, 300க்கும் மேற்பட்டவர்களை கர்நாடக மாநில போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
மேலும் படிக்க...
மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!
வயலில் பதுங்கியிருக்கும் எலிகள்-கட்டுப்படுத்தக் கச்சிதமான வழிகள்!
Share your comments