தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசின் ஏப்ரல் மாதத்திற்கான கட்டுப்பாடுகள் இன்று வெளியாக உள்ளது. இதில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 5-வது நாளாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, நேற்று 2,342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,84,094 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 8.56 லட்சம் பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதில் சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்?
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்த சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கொரோனா பரவலின் நிலை குறித்த விவரங்களை சமர்ப்பித்தார்.
அதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று சராசரியை விட கூடுதலாக இருப்பதாகவும். முக கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் ஏப்ரல் மாதத்திற்கான கட்டுப்பாடுகள் இன்று வெளியாக உள்ளது. இதில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு
இந்திய அளவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 78.56 விழுக்காடு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31,643 பேரும், பஞ்சாபில் 2,868 பேரும், கர்நாடகாவில் 2,792 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இதுவரை நாடு முழுவதும் 5,82,919 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Share your comments