மார்க்கெட்டுக்கு இணையாக ரேசன் கடைகளில் மளிகை பொருட்களை விற்பனை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏழை எளிய மக்கள் பசியோடு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில், மத்திய அரசின் மானியத்துடன் மலிவான விலையில், ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 35,323 ரேசன் கடைகள் உள்ளன. இதில் 10,279 பகுதி நேர கடைகள் அடங்கும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவிக்கு வந்த பிறகு ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக அவ்வப்போது ரேசன் கடைகளில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மக்களிடம் குறைகளை கேட்டு, இன்னும் என்னென்ன கூடுதல் வசதிகளை செய்து தர முடியும் என்று கருத்து கேட்டு வருகின்றனர்.
நவீனப்படுத்துதல்
அதன் அடிப்படையில் ரேசன் கடைகளை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் வகையில் இன்னும் என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்ற பட்டியலும் தயாரித்து உள்ளனர்.
மளிகைப் பொருட்கள்
பொதுவாக ரேசன் கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. சில கடைகளில் இதனுடன் டீத்தூள், உப்பு ஆகியவையும் விற்கப்படுகிறது. ஆனால் சிந்தாமணி போன்ற கூட்டுறவு கடைகளில், மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கடையின் இடவசதியை பொறுத்து பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடவசதி உள்ள ரேசன் கடைகளில் மளிகை பொருட்களை விற்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுவது போன்று குறிப்பிட்ட ரேசன் கடைகளை தேர்ந்தெடுத்து அங்கு மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்க உள்ளனர்.
புதிய கடைகள்
பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இது விரிவுப்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 20 முதல் 25 ரேசன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
Share your comments