வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மின் கட்ட உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள மின் நுகர்வோருக்கு, இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் பயன்படுத்தும் மின்சாரப் பயன்பாட்டைக் கண்டறிய, தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் வீடுகளில் மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. இதுவரை இந்த மீட்டருக்கு வாடகை வசூலிக்கப்படாத நிலையில், இனிமேல் இதற்கும் வாடகை வசூலிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
ரூ.120
அதாவது, மின் பயன்பாட்டை அளவிடப் பயன்படும் மின் மீட்டருக்கு மாதந்தோறும் ரூ.60 என, மின் கட்டணம் செலுத்தும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ.120 மின் மீட்டருக்கான வாடகையாக வசூலிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் அனுமதி கேட்டுள்ளது.ஒரு வேளை, அதற்கு அனுமதி கிடைத்துவிட்டால், இனி, மின் பயன்பாட்டாளர்கள், செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 120 ரூபாயை மின் மீட்டருக்கான வாடகையாக செலுத்தும் அபாயம் நேரிடலாம்.
ரூ.350
இந்த கட்டணம் டிஜிட்டல் மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். எதிர்காலத்தில் ஸ்மார்ட் மின் கட்டண மீட்டர்களைப் பொருத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரு வேளை அதுவும் நடந்துவிட்டால், அதற்கு மாத வாடகையாக ரூ.350 வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விலைக்கு வாங்கலாம்
இந்த மாத வாடகையிலிருந்து தப்பிக்க முடியுமா என்று தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வாடிக்கையாளர்கள் மாத வாடகை செலுத்துவதிலிருந்து தப்பிக்க மின் மீட்டரை விலை கொடுத்து வாங்கிக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.இது மட்டுமல்ல, சேதம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் பழுதடையும் மின் மீட்டர்களை மாற்றுவது அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவது போன்ற பணிகளுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்திக் கொள்ளவும் தமிழ்நாடு மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
அதிகரிக்கத் திட்டம்
தற்போது, மின் மீட்டரை மாற்றுவது மற்றும் வேறு இடத்தில் மாற்றுவதற்கு சிங்கிள் பேஸ் எனப்படும் ஒரு முனை மின்சார இணைப்புக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.500ம், மும்முனை மின்சார இணைப்புக் கொண்டவர்களுக்கு ரூ.750ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை முறையே ரூ.1,000 மற்றும் ரூ.1,500 என உயர்த்திக் கொள்ளவும் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு, மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு என அடுத்தடுத்து நிதிச்சுமையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments