தமிழகத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வேளாண்துறையினர் இதற்கு உடனடி மாற்று ஏற்பாடுகளை செய்து கீழ்மட்ட விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடைக்காலம்
தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நெல் உள்ளிட்ட பயிர்களின் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் மேலுார், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அறுவடை பணிகளை விவாசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
வாடகை அதிகரிப்பு
இந்நிலையில், அறுவடை இயந்திரங்களின் வாடகையை அதன் உரிமையாளர்கள் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலூர் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரம் வைத்திருப்போர் இயந்திரங்களுக்கு அதிக தேவை இருப்பது போல் சூழ்நிலையை உருவாக்கி வாடகை கூடுதலாக கேட்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வாடகை விலை விபரம்
அறுவடை பணிகளை மேற்கொள்ள கடந்தாண்டு டயர் வண்டிக்கு ரூ.1800 வாடகை பெறப்பட்டது. தற்போது அவற்றிற்கு ரூ.2800ம், செயின் வண்டிக்கு ரூ.2800க்கு பதில் ரூ.3600ம் வாடகை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
தொடர் மழையால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அறுவடை இயந்திரத்திற்கு கூடுதல் வாடகை கேட்பதால் நஷ்டமடைந்து வருகிறம் என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக, வேளாண் பொறியியல் துறையினர் உழவர் உற்பத்தியாளர் குழு, தனியார் அறுவடை இயந்திரம் வைத்திருப்பவர்களை கொண்ட குழுவை உருவாக்கி நிலையான வாடகை நிர்ணயம் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் கீழ்மட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துளனர்.
விவசாய கருவிகள் பழுது நீக்க பயிற்சி
இதனிடையே, கரூர் மாவட்டம் அரியூர் உழவர் உதவியகத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. விவசாய இயந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், விசை தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் பராமரிப்பது மற்றும் பழுதுநீக்குவது குறித்து வேளாண் பொறியியல் பிரிவு அதிகாரிகள் விநாயகமூர்த்தி மற்றும் சதீஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் அரியூர் மற்றும் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க...
மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன்! சந்தைப்படுத்தும் குழுக்களுக்கு அழைப்பு!
பயிர் காப்பீடு செய்ய அழைப்பு - திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தண்ணீருக்கு அடியில் திருமணம் - புதுமை செய்து அசத்திய சென்னை ஜோடி!
Share your comments