Republic day celebration
குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் ஆயுத பலத்தை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி ராஜபாதையில் தேசியக்கொடி (National Flag) ஏற்றினார்.
இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வின்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டில்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முப்படைகளின் அணிவகுப்பு (Three Forces)
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றார். இந்த அணிவகுப்பு டில்லி ராஜபாதையில் துவங்கி, இந்தியா கேட் வரை நடந்தது. இதில், 1965, 1971 போரில் பயன்படுத்திய டாங்குகள் மற்றும் தற்போதைய நவீன ஆயுதங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றன.
சென்னை ஆவடியில் தயாரான எம்பிடி அர்ஜூன் எம்கே-1 டாங்குகள், சென்சுரியன் டாங்குகள், பிடி-76 டாங்குகள், ஏபிசி டோபாஸ் டாங்குகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்கே-1 பீரங்கி இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து, முப்படை வீரர்கள், மாணவர் படையினர் மிடுக்குடன் கம்பீரமாக அணிவகுப்பு நடத்தினர். பின்னர், மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்தியும் இடம்பெற்றன. விமானப்படையை சேர்ந்த 75 போர் விமானங்களும் சாகசங்களை நிகழ்த்தின.
Three Forces
பாராசூட் ரெஜிமெண்ட், ஜம்மு காஷ்மீர் காலாட்படையினர், எஸ்ஐகேஎச் காலாட்டையினர், அசாம் ரெஜிமெண்ட் படையினர், எல்லை பாதுகாப்பு படையினரின் ஒட்டகப்படை பிரிவினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
கடற்படை (ம) விமானப்படை
இந்திய கடற்படையின் திறன்களை வெளிப்படையில், கடற்படை வீரர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. ஆத்மநிர்பார் பாரத், ஆசாதி கா அம்ரீத் மகோத்சவ் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
எதிர்காலத்திற்காக மாற்றமடையும் விமானப்படை என்ற தலைப்பில் விமானப்படை அணிவகுப்பு இடம்பெற்றது. அதில், மிக் 21, க்னாட் போர் விமானங்கள் இலகு ரக ஹெலிகாப்டர்கள், ரபேல் போர் விமானம், அஸ்லேசா ரேடார் ஆகியவற்றின் மாதிரிகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.
கோவிட் பரவலால் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
இந்திய குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்!
கடுங்குளிரிலும் தேசியக் கொடியை ஏந்தி குடியரசு தின விழா கொண்டாட்டம்!
Share your comments