உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது குரங்கம்மை நோய் பாதிப்பு வெகுவாக பரவி வருகிறது. அடுத்தடுத்து பரவி வரும் நோய்களால், பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நாட்டில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியானதால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.
குரங்கம்மை நோய் (Monkey pox)
1970 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக மனிதர்களுக்கு குரங்கம்மை நோய் பரவியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. குரங்கம்மை நோய் வேகமாக பரவும் தன்மை கொண்ட நோயல்ல என்றாலும், சமூகப் பரவலாக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே, இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து உலக நாடுகளும் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.
பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, சுவீடன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில், இதுவரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில், மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியானதை, அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 470 ஆக உயர்ந்துள்ளது. குரங்கம்மை நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இங்கிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களை, இந்த குரங்கம்மை நோய் மிக எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. இதனால், அவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்திப்படுகிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments