நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) பாராட்டியுள்ளார். தமிழகத்தில் கடற்பாசி பூங்கா, வேளாண்துறைக்கான கடன் ரூ16.5 லட்சம் கோடியாக அதிகரிப்பது என்பது உட்பட மத்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு பல முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Niramala Seetharaman) வெளியிட்டுள்ளார்.
விவசாய துறை தொடர்பான அறிவிப்புகள்:
- விவசாயிகளுக்கு போதிய அளவு வேளாண் கடன் (Agriculture Loan) வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி அளவுக்கு, கடன் வழங்கும் அளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி (Milk Production) மற்றும் மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த துறைகளுக்கும் இத்தகைய கடனை வழங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.
- ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
- வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) கீழ் செயல்படுத்தப்படும் நுண்பாசனத் திட்டத்திற்கான நிதி தற்போது ரூ.5,000 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
- இ-நாம் (E-Naam) திட்டத்தின் கீழ் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ரூ.1.14 லட்சம் கோடி அளவுக்கு இந்த இ-நாம் மூலம் வணிகம் நடைபெறுகிறது. இந்தத் திட்டம் வெளிப்படையாகவும், போட்டித்தன்மையுடனும் இருக்க 1000 மண்டிகள் இ-நாம்-வுடன் இணைக்கப்படும்
மீன்பிடி துறைமுகங்கள்
மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்களை நவீன அளவில் மேம்படுத்த போதிய முதலீடுகள் (Investments) செய்யப்படும். சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் பெட்டாகட் ஆகிய 5 துறைமுகங்கள் (Ports) மேம்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருமாற்றப்படும். மேலும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மூலம் உள்நாட்டு மீன்பிடி துறைமுகங்கள் (Fishing ports) மற்றும் மையங்கள் மேம்படுத்தப்படும்.
கடற்பாசி பூங்கா
கடற்பாசியின் மதிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், கடலோரவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், வளர்ந்து வரும் துறையாக கடற்பாசி வளர்ப்பு திகழ்கிறது. அந்த வகையில், கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வகை பயன்பாட்டுக்கான கடற்பாசி பூங்கா (Sponge Park) அமைக்கப்படும். இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகுவதோடு கூடுதல் வருவாயை ஏற்படுத்தும்.
விவசாயிகளின் நலன்:
கடந்த ஆண்டுகளில், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இந்த நோக்கம் தொடரும். அரிசி, கோதுமை, பயிர் வகைகள் போன்றவற்றின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மத்திய பட்ஜெட் 2021 - முக்கிய அம்சங்கள் என்னென்ன?
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Share your comments