இடைத்தரகர்கள் இல்லாத தொழில் இன்னமும் இருக்கிறது என்றால், அது பட்டுநூல் உற்பத்தி தொழிலாகத்தான் இருக்க முடியும். இத்தொழிலில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு எந்தவிதமான இடைத்தரகர்களும் இன்றி அரசு நிர்ணயிக்க கூடிய விலையை அப்படியே பெற்றுக்கொள்ளலாம்.
பாரம்பரிய தொழில்களுள் ஒன்றான பட்டுத் தொழில், பண்ணைசார்ந்த தொழிலாகும். கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்பை கொடுக்கும் தொழிலாகவும், வியாபாரநோக்கில் அதிக வருவாயை விவசாயிகளுக்கு ஈட்டித்தரும் தொழிலாகவும் உள்ளது. இந்திய அளவில் பட்டு உற்பத்தியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
குறைந்த முதலீடு (Investment)
விவசாயிகள் ஒரு ஏக்கர் மல்பெரி நடவு செய்து, பட்டு குடில் அமைத்து, பட்டு வளர்ப்பு மேற்கொண்டு பட்டுகூடு அறுவடையின் மூலம் ஆண்டுக்கு குறைந்தது சுமார் ரூ. 3 லட்சம் வரை வருமானம் பெறலாம்.
நவீன தொழில்நுட்ப உதவிகளோடு பட்டுப்புழு வளர்ப்பில் ஏக்கருக்கு மாதந்தோறும் ரூ. 40 ஆயிரம் வரை மாத வருமானம் சம்பாதிக்கலாம். பட்டுத் தொழிலானது மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுநூற்பு ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. சமீப காலத்தில் பட்டுத்தொழிலில் அதிக இலை மகசூல் தரும் வீரிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மல்பெரி சாகுபடியில் நவீன கட்டுக்கோப்பு சாகுபடி முறைகள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
நவீன தொழில்நுட்பங்கள் ( Modern Technology)
பட்டு நூற்புத் தொழிலிலும் பலநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பலமுனை பட்டு நூற்பு இயந்திரங்கள் மற்றும் தானியங்கி பட்டுநூற்பு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த பட்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அரசு வழங்கும் மானியங்கள் (Subsidy)
பட்டுத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை வழங்கி வருகின்றன. உயர்ரக மல்பெரி நடவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மல்பெரி பயிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,500 மானியமாக வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு ரூ.52,500 மானியமாக அரசு வழங்குகிறது. மேலும் ரூ.52, 500 மதிப்பிலான நவீன புழுவளர்ப்புத் தளவாடங்களும் வழங்கப்படுகின்றன.
புதிதாக பட்டுத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ. 7ஆயிரம் ஊக்கத்தொகையுடன் 5 நாள்கள் ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டுப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, தனிபட்டுப்புழு வளர்ப்பு குடில் அமைக்க என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றன.
மேலும் படிக்க...
தென் தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்குகிறது புரெவி புயல்! கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!
Share your comments