கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண்மைத்துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு உதவும் வகையில், ரூ.71.21 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வேளாண்துறை இயக்குனர் ஆய்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், மற்றும் குமராட்சி ஆகிய 5 வட்டாரங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. இதுவரை 19.427 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சணாமூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
விதைகள் கையிருப்பு
ஆய்வைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை இயக்குனர் தட்சணாமூர்த்தி, மேட்டூர் அணை வரும்12 ல் திறக்கப்பட உள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை செம்மையாக செய்யும் வகையில், குறுகிய கால ரகங்களான ஆடுதுறை-43, ஆடுதுறை-45, கோ-51, அம்பை-16 போன்றவை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்களில் 106 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தடையற்ற மும்முனை மின்சாரம்
விதை கிராம திட்டத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் விதைகள், வேளாண்மை விரிவாக்க மையங்களால் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும், குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் காம்பளக்ஸ் மற்றும் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் தற்போது 23,333 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது. டெல்டா வட்டார விவசாயிகளுக்குத் தடையற்ற மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்
குறுவை சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு 16 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 71.21 கோடி ரூபாய் அளவில் வட்டியில்லா பயிர் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி உரிய பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று வேளாண் துறை இயக்குனர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, சிதம்பரம் பகுதியில் நடைபெறும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடப் பணியினை வேளாண்துறை இயக்குனர் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள கூத்தன்கோவில் பகுதியில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம், சமுதாய நாற்றங்கால் அமைத்து குறுவை சாகுபடி செய்த நடவு வயலை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும் வையூரில் எந்திர நடவு பணிகள் மற்றும் வல்லம்படுகை பகுதியில் பாய்நாற்றாங்கால் சாகுபடியும் பணிகளையும் வேளாண் துறை இயக்குனார் ஆய்வு செய்தார்.
Share your comments