9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற, மாணவர்கள் இதற்கெனத் தனியாகத் தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.1000
பள்ளித் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் வருமானம், உள்ளிட்டப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
தேர்வு (Exam)
இந்த திட்டத்தின்படி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.இதற்கான தேர்வு மார்ச் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவ- மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.
தேர்வு விண்ணப்பம் (Exam application)
இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 27-ந்தேதிக்குள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வருகிற 27-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி (eligibility)
இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-22-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
நீட்டிப்பு கிடையாது (No extension)
கூடுதல் விவரங்களை அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் அறியலாம்.
இந்தக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும் போது முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?- 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Share your comments