இரண்டு லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தேனி மாவட்ட ஆட்சியர்முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி,ஐ.ஐ.எம்.ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
ஒரு மாணவருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வருகிற ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments