தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தாக்கம் (Corona impact)
கடந்த 2019ம் ஆண்டு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா முதல் அலை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தைக் கடுமையாகத் தாக்கியது.
பள்ளிகள் மூடல் (Closing of schools)
இதன் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு மேல் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
ஆன்லைனில் வகுப்புகள் (Classes online)
எனினும், மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். ஆனால் பள்ளிகள் திறக்கப்படாததால், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள். நேரடி வகுப்பு நடைபெறாததால் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-அலை தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகளைத் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறைத் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, கொரோனாத் தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு (Opening of schools)
இதன் அடிப்படையில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு அழைத்து நேரடி வகுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி- கல்வித்துறை செய்து வருகிறது.
இணைப்புப் பயிற்சி (Link training)
16 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு தொடக்கத்திலேயே பாடத்திட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளி- கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
சிறு வினாக்கள், ஒருவரி வார்த்தைகள் போன்ற எளிய நடைமுறையில் பாடங்களை 3 வாரங்களுக்கு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு பயிற்சிக்கான செயல்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பள்ளி வேலை நாட்கள் மூன்றில் ஒன்றாக இதற்காக குறைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்கள் வகுப்புக்கு வருவதால் 40 நாட்கள் அடிப்படை பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படையான பயிற்சி (Basic training)
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் இளமாறன் கூறியதாவது:-
மாணவர்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு அடிப்படையான பயிற்சி வழங்கினால் ஆர்வத்தோடு வகுப்புகளை கவனிப்பார்கள். எடுத்த உடனேயே பாடத்திட்டத்தை நடத்தினால் அவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை.
ஆசிரியர் கருத்து (Teacher comment)
அதனால் முந்தைய வகுப்பு பாடங்களை நினைவுபடுத்தி படிப்படியாக புதிய பாடத்திற்குள் கொண்டு வருவது எளிதாக இருக்கும். சிரமங்கள் இல்லாமல் மாணவர்கள் படிக்க ஆர்வம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
Share your comments