மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரயில் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரயில் ஓட்டுநர் இந்த விபத்தைத் தவிர்க்க எவ்வளவோ முயற்சித்தும் இளைஞர்கள் கவனிக்காததால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
செல்போனில் செல்ஃபி என்ற தொழில்நுட்பம் வந்தது முதல், மக்களின் கவனம் என்னவென்றால், அதிநவீன வசதியுடைய ஆன்ராய்டு செல்போனை எப்படியாக வாங்கிவிட வேண்டும். பின்னர் அந்த போனைப் பயன்படுத்தி செல்ஃபி எடுத்து, நண்பர்களையும், உறவினர்களையும் ஆச்சர்யப்படுத்த வேண்டும். குறிப்பாக செல்ஃபி வசதி இல்லாத போன்களை வைத்துக் கொள்வதைத் தற்போது யாருமே விரும்புவதில்லை. வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதோ இல்லையோ, அந்த வீட்டில் வாழும் நபர் கையில், ஆன்ராய்டு போன் இருக்கும்.
செல்ஃபி மோகம்
மக்களின் இந்த செல்ஃபி மோகத்தால், இதுவரை பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன. ரயில்நிலையங்களில்கூட, செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டிருக்கும். ஆனால் ஆசை யாரை விட்டது? அப்படியொரு சம்பவம்தான் இது.
மேற்கு வங்க மாநிலம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற பகுதியில் கங்கஸ்வதி ஆறு ஓடுகிறது. இதன் அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் இந்த பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம். அவ்வாறு இங்கு சில இளைஞர்கள் இயற்கை அழகை ரசித்தனர். திடீரென அவர்கள் ரயில்வே தண்டவாளத்தில் நின்று ஆர்வத்துடன் ‘செல்ஃபி’ எடுத்தனர். அப்போது அந்த வழியாக மெகுனிபூரில் இருந்து ஹவுராவுக்கு ரயில் வந்தது. தண்டவாளத்தில் இளைஞர்கள் கூட்டமாக இருப்பதை பார்த்ததும் என்ஜின் டிரைவர் ‘ஹாரன்’ அடித்து எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார்.
ரயில் மோதி பலி
ஆனால் செல்ஃபி மோகத்தில் இளைஞர்கள், அதனைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. கவனிக்கவும் இல்லை. கண் இமைக்கும் நேரத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த 3 பேர் மீது ரயில் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மிதுன் கான்,அப்துல்கெயின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு இளைஞர், உயிருக்கு ஆபத்தான் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்கள் கண்முன்னே நண்பர்கள் 2 பேர் இறந்தது மற்ற நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது போன்ற உயிர்பலியைத் தடுக்க தண்டவாளத்தில் நின்று யாரும் செல்பி எடுக்க கூடாது என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments