சென்னை மற்றும் புறநகரில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
ஒடிசா அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாகவும், தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நுங்கம்பாகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, கோயம்பேடு, ஆழ்வார்பேட்டை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலான மழை பெய்தது, இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போன்று புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், முடிச்சூர், பெருங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
அதிக பட்ச மழையாக கன்னியாகுமரி மாவட்டம் கோதையாரில் 9 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 6 செ.மீ மழையும், பாபநாசம் குழித்துறையில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments