ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சோலார் மின்சாரம் மூலம் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து அப்பகுதி மக்கள் நெல்சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர்.
வானம் பார்த்து பூமியாக இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகள் மிக குறைவாகவே நடைபெற்று வருகிறது. இதனிடையே, கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திர பாண்டியன் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கடந்த பல ஆண்டுகளாக மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருந்தார்.
கடந்தாண்டு வேளாண்மைத்துறை சார்பில் விவசாய மேம்பாட்டு திட்டத்தில் 80 சதவீதம் மானியத்துடன் சோலார் தகடு அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட ராஜேந்திரபாண்டியன், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சோலார் தகடு அமைத்து அதன்மூலம் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீரை இரைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார். வறட்சி நிலத்திலும் பருவமழையை எதிர்பார்க்காமல் 4 ஏக்கர் நிலத்தில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக பாரம்பரிய முறையில் உழவு செய்து நெல் விதைக்கும் பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நெற்பயிர்கள் வளர தொடங்கியுள்ளது.இதுகுறித்து ராஜேந்திர பாண்டியன் கூறியதாவது, விவசாயிகள் மழையை எதிர்பாரக்காமல் அழிந்துவரும் விவசாயத்தை பாதுகாக்க சோலார் மின்சாரம் மூலம் போர்வெல் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்றார். வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தை விளைச்சல் மாவட்டமாக மாற்றலாம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
பாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!!
Share your comments