வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 4-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த 36 நாட்களாக உறைய வைக்கும் குளிருக்கு மத்தியிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
6-ம் கட்ட பேச்சிவார்த்தை
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், நேற்று மத்திய அரசு விவசாயிகளுடனான 6ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லி விஞ்ஞான பவனில் 41 விவசாய அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான 6-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது வேளாண் சட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களை அரசு தரப்பில் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
மேலும் விவசாயிகளின் அமைப்புகள் வைத்த 4 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை ஜனவரி 4-ந் தேதி மதியம் 2 மணிக்கு நடத்துவது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விவசாயத்துறை அமைச்சர், விவசாய அமைப்புகள் வைத்த 4 அம்சங்களில், இரு அம்சங்களில் இரு தரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அந்த 2 அம்சங்களையும் அரசு ஏற்றுக்கொண்டு விட்டது.
முதல் அம்சம், சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டம் ஆகும். இந்த சட்டம் குறித்து விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். இந்த சட்டத்தில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது, எனவே வைக்கோல்களை எரிப்பதற்காக விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது.
இரண்டாவது அம்சம் மின்சார கட்டணம் தொடர்பானது. மின்சார சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. நீர்ப்பாசனத்துக்காக விவசாயிகளுக்கு மாநிலங்கள் வழங்கி வருகிற மானியம் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். இதிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை பொறுத்தமட்டில் அது தொடரும். ஆனாலும் இதில் மேலும் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. அது 4-ந்தேதி நடக்கிற அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும். அதில் நல்ல முடிவு ஏற்படும் என்றார்.
விவசாய அமைப்பு கருத்து
பேச்சுவார்த்தை குறித்து அகில இந்திய கிசான் சபா தலைவர் ஹன்னன் மொல்லா கருத்து கூறும்போது, “பேச்சுவார்த்தை முறிந்துவிடவில்லை. அது தொடர்கிறது. 4 பிரச்சினைகளில் 2 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மீதி 2 பிரச்சினைகளில் தீர்வு காணப்பட வேண்டும். ஒன்று குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரம், மற்றொன்று 3 சட்டங்களையும் ரத்து செய்யும் பிரச்சினை ஆகும்” என குறிப்பிட்டார்.
திலேப்பியா மீன் வளர்த்து லாபம் பார்க்கலாம் வாங்க!!
பால் முதல் நெய் வரை அனைத்திலும் லாபம் சம்பாதிக்கலாம் - பசு மாடு வளர்ப்பு!
Share your comments