தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் கூடுதல் மழையைத் தந்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு பருவமழை பொதுவாக நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த பருவமழையின் காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் ஆகும்.
இந்த காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்யும். தமிழகத்தைப் பொறுத்தவரை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், நல்ல மழை பெய்வது வழக்கம்.
இயல்பைவிட அதிகம் (Above the Normal)
நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டநிலையில், பல மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. ஜூன் முதல் ஜூலை முதல் வாரம் வரையிலான காலகட்டத்தில், தென் மேற்கு பருவமழை இயல்பைவிட 11 சதவீதம் அதிகமாகப் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்,
நிகழாண்டில் இதுவரை 73.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் 217 மில்லி மீட்டர் மழையும், கன்னியாகுமரியில் 186 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் கரூரில் 294 சதவீதமும், ராமநாதபுரத்தில் 191 சதவீதமும் வழக்கத்தை விட மழை அதிகமாகப் பெய்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு (Rain)
எனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning)
ஜூலை 11ம் தேதி முதல் 12ம் தேதி வரை, வடக்கு அரபிக்கடல் மற்றும் குஜராத் கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 13ம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல்பகுதிகளில், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கனமழை (Heavy rain)
இதனிடையே சென்னையின் சில பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்தது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க....
கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு!
குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்!
Share your comments