தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது.இதனால் கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதியில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடக்கம்
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் வரை நான்கு மாதங்கள் இருக்கும். இந்த காலக்கட்டத்தில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும். தமிழகத்தின், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.இந்நிலையில், தென் மேற்கு பருவமழை கேரளத்தில் இன்று தொடங்குகிறது.
அரபிக்கடலில் புயல்
இதற்கிடையே தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. தொடா்ந்து, புயலாக வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதன் காரனமாக தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் யொட்டி, கிழக்கு, மத்திய கிழக்கு, மேற்கு அரபிக்கடல் , லட்சத்தீவு மற்றும் கேரளம் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையும், சில வேளைகளில் 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, மீனவா்கள் இந்தப்பகுதிகளுக்கு ஜூன் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மழை
தமிழகத்தை பொறுத்தவரை வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகம், உள்தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
6 இடங்களில் வெயில்
தமிழகத்தில் நேற்று 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணி, கரூா்பரமத்தியில் தலா 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருச்சியில் 103 டிகிரி, மதுரை விமானநிலையம், வேலூரில் தலா 102 டிகிரி, சேலத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.
Share your comments