கன்னிவாடி வேளாண் வானிலை கள அலகு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்திற்கான வானிலை முன்னறிவிப்பு (செப் 4 முதல் செப் 8) மற்றும் காலநிலைப் பொறுத்து விவசாயிகளுக்கான வேளாண் ஆலோசனை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 4, 5 மற்றும் 8-ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 37-38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 24-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மணிக்கு 12 முதல்14 கி.மீ வேகத்தில், வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கான ஆலோசனை தொடர்பான விவரம் பின்வருமாறு-
கால்நடை வளர்ப்பு:
மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுவதால் கால்நடைகளை மின்கம்பம் மற்றும் மரத்தடியில் கட்டுவதை தவிர்த்து பாதுகாப்பாக கொட்டகைகளில் கட்டி வைக்கவும். இடி மின்னலில் இருந்து தங்கள் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு கழுத்தில் கட்டியுள்ள உலோக மணிகளை அகற்றிவிடவும்.
மிளகாய்:
மிளகாய் சாகுபடி செய்ய தயாராகும் விவசாயிகள், மிளகாய் விதைகளை அவசியம் விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதை மூலம் பரவும் நுனிக்கருகல் நோய், பழம் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு ட்ரைகோடெர்மா விரிடி 10 கிராம் மற்றும் சூடோமொனஸ் புளுரசன்ஸ் 10 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.
மக்காசோளம்:
தற்போது மக்காசோளம் நடவு செய்துள்ள விவசாயிகள் 1 ஏக்கருக்கு 5 கிலோ TNAU மக்காசோள நுண்ணூட்டம் அல்லது 10 கிலோ ஜிங்சல்பேட் உரத்தினை கொடுப்பதன் மூலம் நுண்ணூட்ட சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். மேலும் மக்கிய தொழு உரத்துடன் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம் 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை கலந்து இட வேண்டும்.
கால்நடை தீவனத்தால் பிரச்சினை:
தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக பசுந்தீவனம் மிகுதியாக கிடைக்கும். எனவே பசுந்தீவனத்தை கால்நடைகள் அதிகமாக உண்ணும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் அசிடோசிஸ் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை குறைத்து அதிக அளவிலான உலர் தீவனங்களை கொடுக்க வேண்டும்.
இதைப்போல் வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான் காலத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தற்போது வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
ரூ.13,966 கோடியில் விவசாயிகளுக்காக 7 திட்டங்கள்- அமைச்சரவை ஒப்புதல்!
Share your comments