கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிப்பட்டுள்ளது என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நோட்டீஸ்
தலைநகர் டில்லியில் பல இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிகைகள் மீறப்பட்டுள்ளது குறித்து, டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) பரவல் குறைந்திருந்தாலும், தொற்று இன்னும் நம்மை விட்டு முழுமையாக நீங்கவில்லை என, மத்திய அரசு தொடர்ந்து கூறி, மக்களிடம் விழிப்புணர்வு (Awareness) ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
எனினும், மத்திய அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்புக்கான வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி
முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை (Social Distance) கடைப்பிடித்தல், வீட்டிலிருந்தே பணியாற்றுவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உள்துறை செயலர் ஆய்வு
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுலா மற்றும் மலைவாசஸ்தலங்களில் கொரோனா பரவலை தடுக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், தொற்று பரவல் நீங்கவில்லை. சிறிய அலட்சியமும் மூன்றாவது அலை பரவலை (Third wave spreading) ஏற்படுத்திவிடும். அதனால் கொரோனா தடுப்பில் அலட்சியம் என்ற பேச்சுக்கே இடம் அளிக்க கூடாது என்றார்.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகம், கோவா, ஹிமாச்சல், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள், சுகாதாரத்துறை செயலர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!
கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு மிகக்குறைவு: ஆய்வில் தகவல்!
Share your comments