நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் அதிஷ்ட கூப்பன்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை நாமக்கல் மாவட்டத்தில் வியாபாரிகள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது . இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற வணிகத்தை வணிகர்கள் தவிர்க்க வேண்டும். மேலும், இரவு, 11 மணிக்கு மேல், எந்த கடைகளும் செயல்படக் கூடாது என்ற போலீசார் அறிவிப்பையும் மீறி, ஒரு சில கடைகள் இரவு நேரங்களில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. குறிப்பாக, பேக்கரி, டீ கடை மற்றும் ஹோட்டல்கள் இயங்குவது, சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
அதனால், 24 மணி நேரமும் செயல்படலாம் என்ற அரசு அறிவிப்பில் உள்ள விதிகளுக்கு பொருந்தாத, கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும், இரவு, 11 மணிக்கு கட்டாயம் அடைக்க வேண்டும் என மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், கதவுகள் இன்றி செயல்படும் அனைத்து பேக்கரிகளும், கதவுகள் அமைத்து பாதுகாப்புடன் தங்களின் வணிகத்தை தொடர வேண்டும். பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்களில், சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறு, ஸ்டிக்கர், மற்றும் டி -ஷர்ட் போன்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம்.
சாதி, மதம், இனம், மொழி, அரசியலுக்கு அப்பாற்பட்டு பணியாற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு, சமூக அக்கறையில் எப்போதுமே பெரும் பங்குண்டு என்பதை நினைவில் கொண்டு, அனைத்து வணிகர்களும், முக்கியத்துவம் மற்றும் தீவிரம் உணர்ந்து, தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகளை நடத்தி, மாவட்ட போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments