தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதன்படி வரும் நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில்,
வானிலை நிலவரம்
இன்று தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
நாளை தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு
வரும் ஏப்ரல் 2 முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
நாளை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் கன மழை
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதேபோல் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று காலை லேசான மழை பெய்தது. இதனால் இதனால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Share your comments