ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் கடந்த 60 நாட்களில் 100,000 ஏக்கர் விவசாய நிலங்களை இலவசமாக உழவு செய்துள்ளதாக டாஃபே (Tractors and Farm Equipment Limited)நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த பொதுமுடக்க காலத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், டிராக்டர் (Tractor) உற்பத்தி துறையில் இந்தியாவின் இரண்டாவது மற்றும் உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டாஃபே (TAFE) கடந்த ஏப்ரல் மாதம் தனது இலவச வாடகை டிராக்டர் திட்டத்தை ஜே பார்ம் சர்வீஸ் (J Farm Service) மூலம் தமிழகம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் அறிமுகம் செய்தது. விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம் கடந்த 60 நாட்களில் ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் தங்களது ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை சாகுபடி செய்து பயன் பெற்றுள்ளதாக டாஃபே நிறுவன சேர்மன் மல்லிகா சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக அரசு பாராட்டு
தமிழக அரசின் வேளாண் துறை முதன்மை செயலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி, உழவன் ஆப் உடன் இணைக்கப்பட்ட டாஃபே (TAFE) நிறுவன ஜே பார்ம் சர்வீசஸ் ஆப் (J farm service app)மூலமாக வழங்கப்பட்ட இந்த இலவச வாடகை டிராக்டர் திட்டத்தை தமிழக அரசு பெரிதும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டபோது குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த சாகுபடி காலங்களில் அவர்களின் பணச்சுமையையும் குறைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலவச வாடகை டிராக்டர் திட்ட நோக்கம்
டாஃபே-யின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட இந்த இலவச வாடகை டிராக்டர் திட்டத்திம் நோக்கம், கொரோனா பாதிப்பு சூழலின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும், இந்த இக்கட்டான சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் குறுவை அறுவடை மற்றும் சம்பா சாகுபடி தயாரிப்பிற்கு இத்திட்டத்தின் மூலம் உதவி செய்து, கொரோனா பாதிப்பினால் அவர்களுக்கு ஏற்படும் விவசாய செயல்பாடுகளின் தடையை குறைப்பதுமே ஆகும்.
உழவுப் பணிகளில் டிராக்டர்கள்
டாஃபே நிறுவனம் தொடங்கிய இந்த ஜே பார்ம் சர்வீசஸ் (J Farm Service) இலவச வாடகை டிராக்டர் திட்டத்தின் மூலம், 18,000 மாசே ஃபெர்குசன் (Massey Ferguson)மற்றும் ஐசர் டிராக்டர் வாடிக்கையாளர்கள் (Eicher Tractor Customers)மற்றும் 75 ஆயிரம் வேளாண் யந்திர உரிமையாளர்களை ஒருங்கிணைத்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோட்டரி டிரில்லர், கல்டிவேட்டர், வட்டுக் கலப்பை டிஸ்க் ஹரோ, மோல்ட் போர்டு பிளக், கதிரடிப்பான் போன்ற வேளாண் இயந்திர சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினால் 38,900 மாசே ஃபெர்குசன் மற்றும் ஐசர் டிராக்டர்களும், 1,06,500 வேளாண் யந்திரங்களும் தற்போது இந்த திட்டத்தில் இணைந்து விவசாயிகளுக்கு இலவச சேவையை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம்
கால்நடை வளர்பவர்களும் கடன் அட்டை பெறலாம்..!
Share your comments