image credit : Credit
துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்க அரசு தரப்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதன் படி, மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அதன் விலையில் 50 சதவீத தொகை வழங்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைக்கவும், ஆயில் என்ஜின், மின்மோட்டார் வசதியை ஏற்படுத்தவும், பாசன நீர் குழாய்களை அமைக்கவும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கவும், மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
10 கோடி இலக்கு
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு தோட்டக்கலை துறைக்கு ரூ.5 கோடியும், வேளாண்மை துறைக்கு ரூ.5 கோடியே 51 லட்சமும் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சோழமாதேவி, வேடப்பட்டி, சர்க்கார் கண்ணாடி புதூர், அக்ரகார கண்ணாடி புதூர், கொழுமம், குமரலிங்கம், சங்கராமநல்லூர், பாப்பான்குளம் கிராமங்களில் குழாய் கிணறு, ஆள்துளை கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
அனைத்து வட்டாரங்களிலும் நுண்ணீர் பாசனம் அமைத்து புதிதாக மின் மோட்டார் அல்லது டீசல் பம்பு செட் அமைக்க விவசாயிகளுக்கு அதன் விலையில் 50 சதவீத தொகை வழங்கப்படுகிறது. நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளும், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க அதற்குச் செலவாகும் தொகையில் 50 சதவீத தொகை என நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்குள் வழங்கப்பட்டு வருகிறது.
யாரை அணுகவேண்டும்?
நுண்நீர் பாசன முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானிய உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார, தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க..
வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - தோட்டக்கலை துறை அறிவுரை!!
இறக்குமதியை குறைக்க இந்தியாவில் அதிகளவில் பெருங்காயம் சாகுபடி - இமயமலையில் சோதனை!
Share your comments