தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
இன்றும் நாளையும் வடக்கு கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இன்று முதல் 21ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இன்று முதல் 19ஆம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை ஒரு சில நேரங்களில் 3.0 மீ முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக் கூடும்.
-
இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழைப்பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 3 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சதமடித்த வெயில்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையம் பகுதியில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 40.6 டிகிரி செல்சியஸ் அளவிலும், நுங்கம்பாக்கம் பகுதியில் 40.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் பதிவானது.
மேலும் படிக்க
தென்மேற்கு பருவமழை தீவிரம் கொப்பரை உற்பத்தி களங்கள் இடமாற்றம்!
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
குறுவை சாகுபடிக்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
Share your comments