வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம், கள்ளக்குறிச்சி , கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் (கோவை), பாபநாசம் (திருநெல்வேலி), வால்பாறை (கோவை) தலா 3செ.மீ, பெருஞ்சாணி (கன்னியாகுமாரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி), சித்தாறு (கன்னியாகுமாரி), தென்காசி (தென்காசி), சோலையார் (கோவை ) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வருகிற 19 ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக
-
அக்டோபர் 18 : அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
அக்டோபர் 19 : மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
அக்டோபர் 20 : மத்திய மேற்கு வங்க கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 16.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.2 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க..
காய்கறி பழங்களை ஏற்றிச்செல்லும் "கிசான் சரக்கு ரயில்" - விவசாயிகளுக்கு 50 % மானியம்
மீன் வளர்ப்புக்கு 40% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
எல்லை பாதுகாப்பு படையில் வேலை! எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள் - முழுவிபரம் உள்ளே!
Share your comments