நீலகிரி மாவட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.13.88 கோடி மானியத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய அரசு செலுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை வாரியம் சார்பில், நடப்பு நிதியாண்டில் (2020-2021), ஏப்., முதல் ஆக., வரையான 6கோடியே 32லட்சம் ரூபாய் மானிய தொகை, 453 பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 7 கோடியே 56 லட்சம் ரூபாய் மானியம், 659 பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
மானிய விபரம்
அதில், சிறு விவசாயிகள் தேயிலை முன்னேற்ற திட்டத்தில், 399 பேருக்கு, 1.46 கோடி ரூபாயும், 'ஆர்த்தோடக்ஸ்' தேயிலை துாள் உற்பத்திக்கான ஊக்க தொகையில், 46 பயனாளிகளுக்கு 5.73 கோடி ரூபாயும், தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு திட்டத்தில், 181 பேருக்கு 31.76 லட்சம் ரூபாயும், மனிதவள மேம்பாட்டு திட்டத்தில், 26 பேருக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானியமும், பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்தில், ஏழு பயனாளிகளுக்கு, 1.20 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
நேரடியாக செலுத்தப்பட்ட மானியம்
இந்த மானியம் குறித்து தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறுகையில்,''மொத்தமாக 13.88 கோடி ரூபாய் மானியம் சுமார் 1,112 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியம் பயனாளிகளின் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதுடன், மொபைல் போனில், குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
Share your comments