ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teachers Eligibility Test) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
வாழ்நாள் முழுவதும் செல்லும்
டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதிமுறை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவித்துள்ளார். அதன் படி, ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஒருமுறை பெற்றால் வாழ்நாள் முழுவதும் செல்லும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இது அமலுக்கு வருவதாகவும், ஏழு ஆண்டுக் காலம் நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்வது, புதிய சான்றிதழ்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்குத் தேவைப்படும் அத்தியாவசிய தகுதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மாநில அரசுகளால் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் நாள் முதல் ஏழு ஆண்டுகளுக்கு இதற்கான சான்றிதழ் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க....
ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் 14 மளிகை பொருட்களின் முழு விவரம்
நடப்பாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் 11 தனியார் இரயில்கள் இயக்கப்படும்!
Share your comments