சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 ஆம் தேதி பெண் ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு வழங்க தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து, பாலின சமத்துவம் மற்றும் சமூகத்தில் பாலின பாகுபாடுகளில் இருந்து வெளிவர வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்தும் பரப்புரை நிகழ்த்தப்படுகிறது.
நாளை (மார்ச்-08) மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தெலுங்கானா அரசு அம்மாநில பெண் ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது நிர்வாக (சேவைகள் நலன்) துறை வெளியிட்டுள்ள ஆணையில் தெலுங்கானா மாநில தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி கையெழுத்திட்டுள்ளார்.
மகளிர் தின கொண்டாட்டம் துவங்கியது எப்போ?
1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சபை ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான சமத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் முதல் ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அதன் பின்னர், மார்ச் 8, 1975 ஆம் ஆண்டு ஐ.நா.சபை தனது முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச மகளிர் தினத்தை அனுசரித்தது.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் மகளிர் தினம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினம் முதன் முதலில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து வெளிப்பட்டது. முதல் தேசிய மகளிர் தினம் அமெரிக்காவில் பிப்ரவரி 28 அன்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி, 1908 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஆடைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் நினைவாக மகளிர் தினத்தை கொண்டாடியது. வேலை நிமித்தமாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மகளிர் தினம் 2023 கருப்பொருள்:
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை ஒரு கருப்பொருள் உருவாக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு (DigitALL: Innovation and technology for gender equality) என்கிற கருப்பொருள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பாலின சமத்துவத்தை அடைய கல்வி மற்றும் தொழில்நுட்ப வழிகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்கிற கருப்பொருளை பெண்களின் நிலை குறித்த ஆணையம் (CSW-67) 67 வது அமர்வின் முன்னுரிமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு வழங்கியுள்ள தெலுங்கானா அரசின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் காண்க:
Share your comments