அரசு ஊழியர்களின் பெண்க ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் இனி 2 மணி நேரம் தாமதமாக வர சிறப்பு அனுமதி அளித்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு எதற்கு தெரியுமா?
பூஜை
வீடு என்று எடுத்துக்கொண்டால், எல்லா நாட்களிலும், விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. அதிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் பூஜை செய்வது வழக்கம். ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதனைக் கடைப்பிடிக்கத் தவறுவதில்லை. ஏனெனில் ஆன்மிகத்திற்கு பூஜை செய்வது பலமாகக் கருதப்படுகிறது.
தீபம்
தீபம் என்பதற்கு இந்து மதத்தில் நெருங்கியத் தொடர்புடையது. எந்த ஒரு மங்கல நிகழ்வைத் தொடங்கும்போதும், விளக் கேற்றித் தொடங்குகிறோம். வாழ்விலும், வாழ்விற்குப் பிறகும் நெருப்பு முக்கியப் பங்காற்றுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு என்பார்கள். அதிலும், வீட்டு வாசலில் விளக்கேற்றி தேவர்களை வணங்குவது கூடுதல் சிறப்பு.
கால மாற்றம்
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததால், தொடர்ச்சியாக செவ்வாய், வெள்ளி தவிர, மங்கல நாட்களிலும் பூஜைகளைச் செய்து அம்பாளின் அருளாசியைப் பெற்றார்கள். ஆனால், இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் இவ்வாறாகப் பூஜைகளைச் செய்வதை நேரம் அனுமதிப்பதில்லை. ஏனெனில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது, மணி ஏழாகிவிடுகிறது.
அதிரடி அறிவிப்பு
எனவே வேலைக்குச் செல்லும் பெண்களின் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முன்வந்தது புதுச்சேரி அரசு. இனிமேல் வெள்ளிக்கிழமைகளில் அலுவலகத்திற்கு 2 மணி நேரம் தாமதமாக வருவதற்கு அனுமதி அளித்திருக்கிறார், பெண்களின் இந்த சிக்கலை உணர்ந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்கள் வெள்ளிகிழமைகளில் 2 மணி நேரம் தாமதமாக பணிக்கு வர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்த கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
வெளியிடப்பட்ட அறிவிப்பின் விபரம்:
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5.45 மணி வரையிலும் இயங்குகிறது. சிறப்பு அனுமதியின்படி, இனி அரசு பெண் ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் காலையில் 2 மணிநேரம் தாமதமாக காலை 11 மணிக்கு பணிக்கு வரலாம்.
13 ஆயிரம்
மாநிலம் முழுவதும் 34 ஆயிரம் அரசு பணியிடங்கள் உள்ளன. இதில் 13 ஆயிரம் அரசு பெண் ஊழியர்கள் உள்ளனர். துணை நிலை ஆளுநரின் இந்த அறிவிப்பு, அரசு பெண் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
பொருந்தாது
மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு 8% வட்டி- மத்திய அரசு அதிரடி!
Share your comments