கொரோனா நிவாரண தொகையின் 2வது தவணை ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார், முதலில் மதுரையில் தனது ஆய்வு பணிகளைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து திருச்சி சென்ற அவர் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், கலையரங்கம், திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
முதல்வர் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நேரம் கொரோனா தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நேரமாகும். பெரும் சவால்களுக்கு இடையே ஆட்சிப்பொறுப்பை ஏற்று இருக்கிறேன். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே அதிகாரிகள் பலர் மரியாதை நிமித்தமாக என்னைச் சந்திக்க வந்தபோது கூட அவர்களிடம் நான் கொரோனாவை கட்டுப்படுத்துவது சம்பந்தமாகத் தான் ஆலோசனை வழங்கினேன். தொடர்ந்து பதவியேற்ற நாள் முதல் இந்த நாள் வரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.
நான் ஆட்சியமைத்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து ஒருவர் கூட பாதிக்கப் படவில்லை என்கிற செய்தி வரும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாளாகக் கருதுகிறேன். கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாப்பதையே தலையாய பணியாக கருதிச் செய்து வருகிறேன் என்றார்.
ஊரடங்கு நீட்டிப்பு
இதைத்தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், இது குறித்து முடிவு செய்ய அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இருக்கிறோம். வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்களையும் அழைத்து இருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்போம் என்றார்.
2-வது தவணை எப்போது?
கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி தான் வழங்குவோம் என அறிவித்திருந்தோம். ஆனால் கொரோனா தாக்கத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே அதனை இரண்டாகப் பிரித்து ரூ.2 ஆயிரம் வழங்கி விட்டோம். அந்த வகையில் 2.70 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதி தவணை ரூ.2 ஆயிரம் ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும் என்றார்.
மேலும் படிக்க...
இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி!!
Share your comments